தற்போது டில்லியை கலக்கி கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், இந்தியர்களை தொடர்பு படுத்தும் ஆதாரங்கள் பல அழிக்கப்பட்டு விட்டதாக, பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் பேரத்தில், இந்தியாவை சேர்ந்தவர்களுக்கும், இத்தாலிய 'பின்மெக்கானிகா' நிறுவனத்துக்கும் இடையே, இடைத்தரகராக செயல்பட்ட நபர், குயிடோ ஹஸ்கே.
இவருக்குதான், இந்திய அரசு தரப்பில் இடைத் தரகர்களாக யார் செயல்பட்டனர்? இரு தரப்புக்கும் இடையே, பணப் பரிமாற்றங்கள் எப்போது நடந்தன? எவ்வளவு பணம், கைமாறியது? போன்ற விவரங்கள் அனைத்தும் தெரியும்.
இந்த விபரங்கள் அனைத்தையும் குயிடோ ஹஸ்கே, தன் கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவில், 'பனோரமா பாக்ஸ்' என்ற பெயரில், பதிவு செய்து வைத்திருந்தார் என்கிறார்கள். ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான விவகாரம் பெரிதானதை அடுத்து, இந்த தகவல் அனைத்தையும், குயிடோ அழித்து விட்டார் என்கிறது இத்தாலியப் பத்திரிகை ரிபப்ளிகா.
விவகாரம் கைது வரை போனபோது, விசாரணை அதிகாரிகள் குயிடோவின் தாயார் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கிருந்த சூட்கேசில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான சில விவரங்களை, மற்றொரு ஹார்டு டிஸ்க்கில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த ஹார்டு டிஸ்க்கும், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான சில ஆவணங்களும் தற்போது இத்தாலி அரசின் வழக்கறிஞர் பஸ்டோ அரிசோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல தகவல்கள் அழிக்கப்பட்டு விட்டதால், தற்போது அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான இந்தியர்கள் பற்றிய அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment